ஜாமினில் விடுவிக்க லஞ்சம்: காவல் ஆய்வாளர், தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் - கோவையில் தொடரும் அதிரடி

கோவை அருகே, ஜாமினில் விடுவிக்க கார் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலம், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு சென்றான்பாளையம் பிரிவில், கடந்த 20ஆம் தேதி இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில், முதியவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சுரேஷ் என்பவரை கிணத்துக்கடவு காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட கார் ஓட்டுனர் சுரேஷ் என்பவரை ஜாமினில் விடுவிக்க, கார் உரிமையாளரிடம் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலம் இருவரும், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் கார் உரிமையாளர் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தலைமை காவலர் வெங்கடாசலத்திடம் கொடுத்துள்ளார், அந்த பணத்தை தலைமை காவலர் வெங்கடாசலம், காவல் ஆய்வாளர் சுரேஷிடம் வழங்கியுள்ளார்.

இது குறித்து, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கார் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலத்திடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் விசாரணை நடத்தியதில் லஞ்சம் பெற்றது உண்மை என்று தெரிய வந்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலத்தை, இன்று கோவை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சூதாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நெகமம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஏசுபாலன், நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil