ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என உறுதிமொழி ஏற்ற வேட்பாளர்கள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என உறுதிமொழி ஏற்ற வேட்பாளர்கள்
X

உறுதிமொழி ஏற்ற வேட்பாளர்கள்.

நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு எதிராக தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு பணம் தருவதை தவிர்த்து, நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என அனைத்து கட்சி வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சுந்தராபுரம் சங்கம் வீதி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சுந்தராபுரம், குறிச்சி பகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 'ஓட்டுக்கு பணம் கொடுக்கமாட்டேன்' என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, அமமுக, தேமுதிக, பாஜக, மக்கள் நீதி மய்யம், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம், நாட்டுக்கு அழிவு, நான் ஓட்டுக்கு பணம் தரமாட்டேன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறுகையில், நீட் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அனைத்துக் கட்சி கூட்டங்கள் கூட்டுவதை போல, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்த்து தேர்தல் நேர்மையாக நடக்க அனைத்து கட்சி வேட்பாளர்களை அழைத்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். ஆனால் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. இது அக்கட்சியினர் பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சிக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture