வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி கொள்ளையடித்த கும்பல் கைது
கைது செய்யப்பட்ட 7 பேர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியில் வசித்து வருபவர் பஞ்சலிங்கம். லாரி உரிமையாளரான இவரது வீட்டில் கடந்த 15 ம் தேதி ஒரு கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து, பீரோவில் வைத்திருந்த 15 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது.
மேலும் வங்கி கணக்கு புத்தகம், செக் புக் ஆகியவற்றை எடுத்துக் கொண்டதுடன், சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்யையும் எடுத்துச் சென்றனர். இது குறித்து பஞ்சலிங்கம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.
கோவை - பொள்ளாச்சி சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, குற்றவாளிகள் வந்த வாகனத்தின் பதிவு எண் தெரியவந்தது. இதனைக் கொண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் கற்பகம் பல்கலைகழகம் அருகே அதிகாரிகள் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்ட பிரவீன்குமார், மணிகண்டன், மோகன்குமார் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 3 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த சதீஸ், ராமசாமி, ஆனந்த், தியாகராஜன் ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேத்யூ, மகேஸ்வரன், பைசல் ஆகிய 3 பேரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu