செல்போனில் அடிக்கடி பேசிய மனைவி: பேட்டால் அடித்து கொலை செய்த கணவன்..!
உயிரிழந்த கவிதா
கோவை காந்திமா நகர் பகுதி மூன்றாவது வீதியில் வசித்து வருபவர் குமார் என்கிற லவேந்திரன் ( 49). இவர் மனைவி கவிதா (32) மகன்கள் பூபதி மற்றும் யோசுவா ஆகியோருடன் வசித்து வருகிறார். குமார் என்கிற லவேந்திரன் பழைய கட்டிடம் இடிக்கும் பணி செய்து வருகிறார். கவிதா வீட்டின் அருகிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பூபதி என்ற மகன் இருந்த நிலையில், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இலங்கை அகதியான குமார் என்கிற லவேந்திரனை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கவிதா செல்போனில் அடிக்கடி நண்பர்களுடன் பேசி வந்த காரணத்தினால் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு இருந்துள்ளது. இதனால் கவிதா கோபித்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டைவிட்டு நண்பர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வீட்டிற்கு வந்த கவிதாவுக்கும் லவேந்திரனுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கோபத்தில் இருந்த லவேந்திரன் கவிதாவை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனையடுத்து லவேந்திரன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார். இதனை பக்கத்து வீட்டில் குடியிருந்த கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் ஓடிச் சென்று பார்த்துள்ளார். அப்போது கவிதா உயிரிழந்து இருப்பதைக் கண்டு உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்க்குச் சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், லவேந்திரனை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu