முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் ஊழல் புகார்
ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத். அதிமுக நிர்வாகியாக இருந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 26 ம் தேதி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 1500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதில் கோவையில் பல்வேறு திட்டங்களில் 12 சதவீதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருந்து ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலர் உடந்தையாக செயல்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று கோவை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி துறைகளில் நடந்த ஊழல் தொடர்பாக 150 பக்க ஆவணங்களுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ரேஸ்கோர்ஸ் ரகுநாத் ஊழல் புகார்களை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரேஸ்கோர்ஸ் ரகுநாத், "ஏற்கனவே நான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது 1500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தேன். எனது புகார் தொடர்பாக கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் என்னிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே நான் வைத்திருந்த ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் ஒப்படைத்துள்ளேன். இது எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும், துணிந்து ஆவணங்களுடன் புகார் அளித்துள்ளேன்" என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu