ஊரடங்கு மக்களுக்குத் தான், எங்களுக்கு இல்லை! - ஜாலியாக உலா வந்த காட்டு யானைகள்
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாகன இரைச்சல்கள் இல்லாததால் அமைதியான சூழல் நிலவுகிறது. இதனால் வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
யானை உள்ளிட்ட வன விலங்குகள் பகல் நேரங்களிலேயே உலா வரத் துவங்கியுள்ளன. கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது, மருதமலை முருகன் கோவில். மலையின் மீது படியேறி நடந்து செல்லும் படுக்கட்டுகளில் வலசை செல்லும் காட்டு யானைகளை அவ்வப்போது பார்க்க முடியும். இந்நிலையில் மருதமலை பகுதிக்கு இன்று மாலை இரண்டு குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் கூட்டம் வந்துள்ளது. மருதமலை கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் மீது யானைகள் சிறிது நேரம் நின்றிருந்தன. அப்போது அங்கே இருந்த நபர்கள் யானைகள் வரும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
அதில் ஒவ்வொரு யானைகளாக காட்டிற்குள் இருந்து வந்து படிக்கட்டுகளில் நிற்பதும், குட்டிகளை சுற்றி யானைகள் பாதுகாப்பு அரணாய் நிற்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சிறிது நேரம் அப்பகுதியில் நின்றிருந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu