கோவையில் 300 படுக்கைகளுடன் சேவாபாரதி சார்பில் கொரோனா கேர் சென்டர் துவக்கம்
கோவையில் துவக்கப்பட்டுள்ள கொரோனா கேர் சென்டர்
கோவையில் கொரோனா தொற்று நாள் தோறும் மூவாயிரத்தை கடந்து வரும் நிலையில். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிடுகின்றன. இதனால் படுக்கை இல்லாமல் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த ஜி.என்.மில்ஸ் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சேவாபாரதி சார்பில் 300 படுக்கைகளுடன் கொரோனா கேர் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 'ஏ' சிம்டம்ஸ் உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஒரு அறையில் இரண்டு பேர் வீதம் அனுமதிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. அவசரத் தேவைக்காக ஒரு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரமும் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 12 நோயாளிகள் ஆக்சிஜன் வசதி பெரும் வகையில் ஆக்சிஜன் பேருந்து ஒன்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் 50 க்கும் மேற்பட்ட சேவாபாரதி அமைப்பின் தன்னார்வலர்கள் இங்கு சேவை செய்து வருகின்றனர். கொரோனா கேர் மையத்தினை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கோயமுத்தூர் தகவல் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த சிங்கை ஜான் கலந்து கொண்டு ரூ.2லட்சத்து 50ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu