கோவையில் லஞ்சம் வாங்கிய ஏட்டு பணியிட மாற்றம்

கோவையில் லஞ்சம் வாங்கிய ஏட்டு பணியிட மாற்றம்
X

மாங்கரை சோதனைச்சாவடி

ரூபாய் ஆயிரத்து 500 மதிப்புள்ள ஒரு பாய் என்பது பழங்குடியின பெண்களின் ஒரு வார கால உழைப்பும் உள்ளதாக கூறியுள்ளார்.

கோவையிலிருந்து தமிழக - கேரள எல்லைப்பகுதியான ஆனைக்கட்டி செல்லும் வழியில் மாங்கரை சோதனைச்சாவடி உள்ளது. கோவை தடாகம் பகுதியை சேர்ந்த தையல்காரர் ஐய்யப்பன், ஆனைக்கட்டிக்கு ரூபாய் ஆயிரத்து 500 மதிப்புள்ள இரு பாய்களை எடுத்து சென்றார். அப்போது, மாங்கரை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த 4ஆம் அணி பட்டாலியன் காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய இருவர், அந்த இரு பாய்களுக்கான பில் கேட்டுள்ளனர். தன்னுடையது சிறிய கடை என்பதால் பில் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். உடனே, இரு பாய்களில் ஒன்றை அந்த காவலர்கள் லஞ்சமாக எடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த பாய் பழங்குடியினரின் வாழ்வாதாரம் தொடர்புடையது என்பதை சுட்டிக்காட்டி மாவட்ட எஸ்.பி.க்கு வாட்ஸ் அப் மூலம் அப்பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் புகார் அளித்தார்.

சவுந்தரராஜன் பழங்குடியினர் வாழ்வாதாரத்திற்காக ஆனைக்கட்டியில் ஆதிவாசி பெண்கள் வாழ்வாதாரம் மையத்தை நடத்தி வருகிறார். அங்கு, வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் பாயின் விற்பனையை நம்பியே, பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரம் உள்ளதாகவும், ரூபாய் ஆயிரத்து 500 மதிப்புள்ள ஒரு பாய் என்பது பழங்குடியின பெண்களின் ஒரு வார கால உழைப்பும் உள்ளதாகவும், அந்த பாயின் ஓரம் அடிக்கவே தடாகத்தில் உள்ள தையல்காரர் ஐய்யப்பனிடம் கொடுக்கப்பட்டதாகவும் , அதற்கு பில் என்பது எப்போதும் கிடையாது என்பதை புகாரில் குறிப்பிட்டு, உடனடியாக பாயை எடுத்துக்கொண்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சோதனைச்சாவடியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, லஞ்சமாக பாயை எடுத்துக்கொண்ட 4 ஆம் அணி பட்டாலியன் காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோர் சோதனைச்சாவடி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் பட்டாலியனுக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து, இருவர் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.,மூலம் பட்டாலியன் கமெண்டண்டக்கு அறிக்கை அனுப்பப்படவுள்ளது. மேலும், மாங்கரை சோதனை சாவடியின் பொறுப்பு அதிகாரியான துடியலூர் தலைமை காவலரான முத்துசாமியை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். புகார் அளித்த 6 மணி நேரத்திற்குள் பாயை மீட்டு சவுந்தரராஜனிடம் காவலர்கள் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!