கொங்கு மண்டலத்தில் அதிமுக வாஷ் அவுட் செய்யப்படும்: ஸ்டாலின்
கோவை துடியலூர் பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். கவுண்டம்பாளையம் வேட்பாளர் பையா என்கிற கிருஷ்ணன், கோவை வடக்கு வேட்பாளர் சண்முக சுந்தரம், சிங்காநல்லூர் வேட்பாளர் கார்த்திக், கோவை தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின எஃகு கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி சொல்லி வருகின்றார். ஸ்டாலின் அந்த கொங்கு மண்டலத்தில் நாடாளுமன்ற தேர்தலிலேயே நாங்கள் ஓட்டையை போட்டு விட்டோம். இந்த முறை கொங்கு மண்டலத்தில் அதிமுக வாஷ் அவுட் செய்யப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
பலம் வாய்ந்த அமைச்சர்கள் இந்த கொங்கு மண்டலத்தில் இருந்தாலும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என தெரிவித்தார். சிறுகுறு தொழில் நெசவு தொழில் உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், அமைச்சர் வேலுமணி தனது சகோதரர் மூலம் கொள்ளையடித்து வருகின்றார் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் பொள்ளாச்சியில் பாலியல் துன்புறுத்துல் செய்தவர்களை காப்பாற்றி இந்த அரசு மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றது எனவும், இவர்களுக்கு மறக்க முடியாத அளவிற்கு பெரிய தண்டனையை மக்கள் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அமைச்சர் வேலுமணி இந்த பகுதியில் உள்ள 21 தொகுதிகளை பார்த்து கொள்கின்றேன் என்றார். ஆனால் இப்போது அவரது தொகுதியில் மட்டுமே முடக்கி விட்டோம் என கூறிய ஸ்டாலின் இதுதான் திமுக எனவும், திமுக தொண்டன் வெறித்தனமா இருக்கின்றான் எனவும் தெரிவித்தார். ஊழல் செய்தவர்கள் மீது ஆட்சிக்கு வந்த பின் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஊழல் செய்தவர்கள் அடுத்த நாளே சிறைக்குள செல்வார்கள் என கூறிய ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
கொள்ளையடிப்பதில் நம்பர் 1 வேலுமணி தான் எனக் கூறிய அவர், வேலுமணி மீதான ஊழல்களை ஸ்டாலின் பட்டியலிட்டார். இதே போல அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்து உள்ளனர் எனவும், தனி நீதி மன்றம் அமைத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும், யார் விட்டாலும் ஸ்டாலின் விடமாட்டான் என தெரிவித்தார். தாராபுரத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு அன்றே பதில் சொன்னேன் என கூறிய ஸ்டாலின் நேற்று உ.பி். முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கு வந்து பிரச்சாரத்திற்கு வந்த போது,
அமைதியாக இருந்த கோவையில் ஊர்வலமாக சென்று பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அதே போல பா.ஜ.க புகுந்த இடமும் உருப்படாது என கூறிய அவர் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கின்றார். இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கக்பட்டது அவர்கள் ஆளும் உ.பி மாநிலம் எனவும் பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் நிலையை இவ்வளவு மோசமாக வைத்துக்கொண்டு திமுகவை பேசுறதுக்கு அவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது எனவும் தெரிவித்தார். பிரதமர் மோடி நாளை மதுரை வரும் போது, பிரச்சாரத்திற்கு செல்லும் முன்பு மதுரை எய்ம்ஸ்க்கு சென்று பார்க்க வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தை பொறுத்த வரை சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஓப்பந்தம் ரத்து செய்யப்படும் மாநகராட்சியே நேரடியாக தண்ணீர் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பன உட்பட கோவைக்கு அளிக்கபட்ட வாக்குறுதிகளை படித்த ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகள் பின்நோக்கி போய்விட்டோம் எனவும் தெரிவித்தார். இந்த நான்கு பேருக்கு மட்டுமல்ல எனக்கும் ஓட்டு கேட்டு வந்திருக்கின்றேன் எனவும் முதலமைச்சர் வேட்பாளராக ஓட்டு கேட்கின்றேன் எனவும் தெரிவித்த அவர் திராவிட இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், சுயமரியாதை, தன்மானம் காப்பாற்றப் பட வேண்டும் என தெரிவித்த அவர், மதவெறியை திணிக்கவும், இந்தியை திணிக்கவும் மத்திய அரசு முயல்கின்றது எனவும் ஆனால் இது தந்தை பெரியார் பிறந்த மண், அண்ணா பிறந்த மண், கலைஞர் பிறந்த மண் இங்கு மோடி மஸ்தான் வேலை எல்லாம் பலிக்காது எனவும் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu