1.30 கோடி ரூபாய் மதிப்பிலான வைர, தங்க நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை

1.30 கோடி ரூபாய் மதிப்பிலான வைர, தங்க நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை
X
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1.30 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள், 50 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

கோவை துடியலூர் கவுண்டர் மில்ஸ் அதிர்ஷ்ட லட்சுமி நகர் பகுதியை சார்ந்தவர் தொழில் அதிபர் சீனிவாசன். இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஐஸ்கிரீம் டீலரான இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கியுள்ளார். இன்று அதிகாலை எழுந்து பார்த்த போது வீட்டின் பீரோக்கள் திறக்கப்பட்டிருந்ததும், அதில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த பொருட்களை சரி பார்த்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த 1.30 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள், மற்றும் 50 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்துஅவர் துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பீரோவில் பதிவான கைரேகைகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அதே பகுதியில் மேலும் ஆறு வீடுகளில் அடுத்தடுத்து தொடர் கொள்ளை முயற்சி நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் மேற்கு மண்டல காவல் துறைத் துணைத் தலைவர் முத்துச்சாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பதிவான கை ரேகைகளை கொண்டு இச் சம்பவத்தில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகளா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தொழிலதிபர் சீனிவாசன் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கிய நிலையில் நள்ளிரவில் 3 மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்ததும் சீனிவாசன் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்கு எதிரே உள்ள அறையில் நுழைந்து பீரோவை உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் வீட்டுக்குள் வரும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையிலும் போலீசார் தங்களுடைய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவையில் சமீபகாலமாக ஆட்கள் உள்ள வீடுகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!