கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்
பெண் பேருந்து ஒட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த கமல்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளம் மற்றும் செய்திகளில் அதிகம் பேசப்படுபவர் கோவையின் முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளா தான். கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை மகேஷ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். இதனால் ஷர்மிளாவுக்கு சிறு வயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.
இதையடுத்து ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் இவர் ஓட்டிய பேருந்தில் வானதி சீனீவாசன் பயணம் மேற்கொண்டார். பின்னர் 3 நாட்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி பயணம் செய்தார். கனிமொழி பயணத்தின் போது அந்த பேருந்தில் பயிற்சியாக இருந்து வரும் பெண் பயிற்சி நடத்துநர் கனிமொழி எம்பி இடம் பேருந்து பயணத்திற்கான பயண சீட்டு கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கனிமொழி சிரித்துக் கொண்டே தனது உதவியாளர் மூலம் டிக்கெட் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து கனிமொழி இறங்கி வாழ்த்துகளை தெரிவித்து சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் ஷர்மிளாவை வேலையை விட்டு நிறுத்தியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து ஷர்மிளா கூறும் போது, புதிதாக நியமிக்கப்பட்ட பெண் கண்டக்டர் கனிமொழி இடம் ஒரு மாதிரியாக பேசினார். இது தொடர்பாக பேருந்தை காந்திபுரத்தில் நிறுத்திவிட்டு முதலாளியிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை விளம்பரத்திற்காக இதை செய்கிறாய் என்றார். உரிமையாளர் என்னை வேலையை விட்டு நிறுத்தி விட்டார் என்று அவர் கூறினார்.
அதன்பின், தான் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஷர்மிளா செயல்படுவதாக பேருந்து உரிமையாளர் அவரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக பேருந்தின் உரிமையாளர் கூறுகையில், நாங்கள் யாரும் அவரை வேலையை விட்டு நீக்கவில்லை. அவரே தான் சென்றார் என கூறினார். இது சர்ச்சையான நிலையில் கனிமொழி எம்பி ஷர்மிளாவை தொடர்பு கொண்ட அவருக்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா தொடரும் வகையில் நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு கார் பரிசளிப்பதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஷர்மிளாவை சந்தித்து கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக நடிகர் கமல் பண்பாட்டு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன் முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர்கள் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்பட செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்.
தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தத மிகுந்த வேதனை அடைந்தேன். ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.
கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.
ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆள வருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மகள் ஷர்மிளாவிற்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu