நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவு. மாசடையும் ஆற்று நீர்

நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவு. மாசடையும் ஆற்று நீர்
X

ரசாயன கழிவுகள் கலப்பதால் நுரை பொங்கி காட்சியளிக்கும் நொய்யல் ஆறு

மழைக்காலத்தை பயன்படுத்தி தொழில் நிறுவனங்கள், பட்டறைகள் ரசாயனக் கழிவை நொய்யல் ஆற்றில் வெளியேற்றி வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் காவிரியில் நொய்யல் ஆறு கலக்கிறது. 172 கி.மீ., நீளம் கொண்ட இந்த ஆறு, குப்பை, பிளாஸ்டிக் கழிவு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் உள்ளிட்ட கழிவுகளுடன் வருவதால் இந்த ஆற்று நீரை நம்பியிருக்கும் விவசாய நிலங்கள் பாழ்படுவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் மாசடைகிறது.

தற்போது, கோடை மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் பெருக்கெடுப்பதை பயன்படுத்தி தொழிற்சாலைகள், பட்டறைகளில் இருந்து சாயம், ஆயில் உள்ளிட்ட ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

மழைக்காலத்தை பயன்படுத்தி தொழில் நிறுவனங்கள், பட்டறைகள் ரசாயனக் கழிவை நொய்யல் ஆற்றில் வெளியேற்றி வருகின்றன. இதனால், நீரின் நிறம் மாறி, நுரை பொங்குவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒண்டிப்புதுார், நெசவாளர் காலனியில் இருந்து பட்டணம் பகுதி செல்லும் வழியில் உள்ள அணைக்கட்டில், நொய்யல் ஆறு சாக்கடை கழிவால் கருமை நிறமாக காட்சியளிக்கிறது. பல அடிக்கு பறக்கும் நுரையால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மழை நேரத்தில் தொழில் நிறுவனம், பட்டறைகளில் இருந்து நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவு அதிகம் வெளியேற்றுகின்றனர். இதனால், ஆற்று நீரில் அதிகளவு நுரை பொங்குகிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேய்ச்சலின்போது நுரை கலந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளும் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன என்று கூறினர்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (தெற்கு) மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கூறுகையில், 'ஆற்று நீர் மாதிரியை சேகரித்து சோதனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படை வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

பட்டணம், சூலுார், செங்கத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இந்நீரை நம்பி, 2,000 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. ரசாயன நீரால் காய்கறிகள் வளர்ச்சி குன்றி, நிறம், சுவையும் மாறுகிறது. இதை குடிக்கும் கால்நடைகள் நோய் பாதிப்புக்குள்ளாகின்றன. குளத்தின் அடியே ரசாயனம் படிவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை பிரச்னையை கொண்டு செல்லப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!