ஐந்தாவது நாளாக நீடித்த வருமானவரித்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த 5 நாளாக வருமான வரிச்சோதனையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சோதனையானது கோவையிலும் நீடிக்கிறது. கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் அங்குள்ள அவரது மகன் ஸ்ரீராம் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகம் மற்றும் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
இதில் மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீட்டில் நடந்த சோதனை ஒரே நாளில் நிறைவடைந்தது. மீனா ஜெயக்குமார் வீடு உள்பட மற்ற இடங்களில் நேற்று 4-வது நாளாக சோதனை நீடித்தது.
மீனா ஜெயக்குமாரின் வீட்டில் 5-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர்களது வீட்டில் உள்ள லேப்-டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இன்று 5-வது நாளாக அவரது வீட்டில் சோதனையானது நீடிக்கிறது. இந்த சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவர்களிடம் விசாரணை நடத்தவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்குள்ள ஆவணங்கள், லேப்-டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர். அதில் உள்ள விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 5-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடக்கிறது.
கள்ளிமடையில் உள்ள காசாகிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டில் 4 நாட்களாக நடந்த வருமானவரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu