விளம்பர பலகை விவகாரம்: கோவை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவை மாநகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்
சாலை சந்திப்புகள், திருப்பங்கள் மற்றும் சாலைகளுக்கு அருகாமையில் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாதென, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறது.
இவ்விதிமுறையை மீறி, கோவையில் பல்வேறு இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. ரயில்வேக்குச் சொந்தமான இடங்களில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
சாலைகளில் செல்வோர், விபத்தில் சிக்கக்கூடிய வகையில் இருந்தன. அவற்றை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் சமீபத்தில் அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விளம்பர ஏஜன்சியினர், சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் தொடர்ந்தனர். அதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், 'ரயில்வேக்குச் சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' என, மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், விளம்பர பலகைகள் வைப்பதாக இருந்தாலும், மாவட்ட ஆட்சியரிடம் தடையின்றி சான்று (என்.ஓ.சி.,) பெற வேண்டும் என்பது விதி. தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த பணிகள் விதிகளின் படி, மாநகராட்சியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெற்றாலும் கூட, ரயில்வே வளாகத்துக்குள் ரயிலில் செல்லும் பயணிகள் மற்றும் காத்திருக்கும் பயணிகள் பார்க்கும் வகையில் மட்டுமே, விளம்பர பலகைகள் நிறுவ வேண்டும். இதற்கு மாறாக, மாநகராட்சி மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், விளம்பர பலகைகள் நிறுவப்பட்டிருக்கின்றன.
விளம்பர பலகைகள் சாலையை நோக்கி அமைத்திருப்பதால், வாகன ஓட்டிகள் கவனம் திசை திரும்புகிறது; விபத்து ஏற்படுத்த வழிவகுக்கிறது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் விரிவாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu