புகையிலைப் பொருட்கள் மீதான தடை.. சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவர முடிவு…

புகையிலைப் பொருட்கள் மீதான தடை.. சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவர முடிவு…
X

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன். (கோப்பு படம்).

புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடர்பாக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா கோவை இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கியினை அணிவித்தார்.

தொடர்ந்து, அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் 708 மருத்துவமனைகளை கட்ட முதல்வர் உத்தரவிட்டு அதில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர் மற்றும் ஒரு உதவியாளரை நியமித்துள்ளார். தமிழகத்திலேயே கோவை மாவட்டத்திற்கு 72 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு 64 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 708 மருத்துவமனைகளில் பெரும்பாலான கட்டிடப் பணிகள் முடிவடைந்துவிட்டன. ஒரு சில மருத்துவமனைகள் மட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

மருத்துவத் துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 6 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதுதவிர, கோவை மணியகாரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த ஆண்டுகளில் 400 புற நோயாளிகள் வந்து கொண்டிருந்த சூழலில் தற்போது அது 1200 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்துள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் திட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 500 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டு அந்த பகுதிகளுக்கு உட்பட்ட 679 மருத்துவமனைகளில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். விபத்து ஏற்பட்டவரை மருத்துவமனைகளுக்கு அனுமதிப்பவருக்கு ரூ. 5,000 ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.

இதுவரை இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர். அவர்களுக்காக 125 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ மாணவர்களுக்காக தமிழில் பாடநூல்கள் வெளியிடப்பட உள்ளன.

சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது. பிப்ரவரி 2 ஆம் தேதி 787 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்க உள்ளார். தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்.

புகையிலைப் பொருட்கள் மீதான தடையை நீதிமன்றம் நீக்கி உள்ள சூழலில் தமிழக அரசு போதை பொருட்களை தமிழகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுகிறேன்.

புகையிலைப் பொருட்கள் மீது தடை விதிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!