தமிழ் பண்பாடு, கலாச்சாரம் பற்றி தெரிந்துகொள்ள கோவை வந்த ரஷ்ய நாட்டு குழுவினர்
கோவை துடியலூர் கதிர்நாயக்கன்பாளையம் குருடிமலை அடிவாரம் அருகே புதிதாக சுந்தரவல்லி உடனுறை சுந்தரலிங்கேஸ்வரர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த கோவிலில் சுந்தரலிங்கேஸ்வரருடன் சுந்தரவல்லி அம்பாளும் ஒரே சன்னதியில் இருக்கும்படி கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களை சார்ந்த சித்த மருத்துவர்கள், வர்ம கலைஞர்கள் 15 பேர் மற்றும் கஜகஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என 16 பேர் கொண்ட குழுவினர் ரஷ்ய தமிழர் பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் கடந்த 14-ம் தேதி சென்னை வந்தனர். பின்னர் அங்கிருந்து மதுரை, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு சென்று பார்த்தனர்.
காரைக்காலை சேர்ந்த சித்தர் புத்த கயா அழைப்பின் பேரில் தற்போது குருடிமலை அடிவாரம் அருகே கட்டப்பட்டு வரும் சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலை பார்வையிட்டனர். இவர்களில் 9 பேர் கிறிஸ்தவ மதத்தையும், 7 பேர் இஸ்லாமிய மதத்தையும் சேர்ந்தவர்கள்.
இவர்களை கோவில் நிர்வாகிகள் ரமேஷ், கனகராஜ், மோகன், தாமு மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்றனர். கோவில் அர்ச்சகர் சீனிவாசன் ரஷ்யர்களை மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சித்த நாடி குறித்து ஆலோசனை செய்தனர். மேலும் காரைக்காலை சேர்ந்த சித்தர் புத்த கயா ரஷ்ய நாட்டவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.
இதுகுறித்து ரஷ்ய குழுவை சேர்ந்த பேராசிரியர் முருகதாஸ் கூறியதாவது,
உலகில் எங்கும் இல்லாத வகையில் கலாச்சாரம், பண்பாட்டில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதனை பார்ப்பதற்காகவும், சித்தா, வர்ம கலைகளின் பிறப்பிடமான இந்தியாவிற்கு ரஷ்யா நாட்டை சேர்ந்த மொத்தம் 16 பேர் எனது தலைமையில் வந்துள்ளனர். நாங்கள் தமிழகத்தின் பல இடங்களிலுள்ள கோவில்கள், சித்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். தற்போது கோவைக்கு வந்துள்ளோம். மேலும் வாழ்வை உணர்ந்து வாழ, சித்தர்கள் வழியை ரஷ்ய நாட்டவர்களும் தெரிந்து கொள்ளவே இது போன்ற பயணங்களை மேற்கொள்கிறோம் என்று கூறினார். மேலும் ரஷ்ய மாணவி ஒருவர் கூறும் போது, நாங்கள் தமிழ் பண்பாடு, கலாச்சாரம், சித்தர்களை பற்றி தெரிந்துகொள்ள கோவை வந்துள்ளோம் என்றார்.இந்தியாவிற்கு ரஷ்யா நாட்டை சேர்ந்த மொத்தம் 16 பேர் எனது தலைமையில் வந்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu