பூ மார்க்கெட் அருகே சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை பூ மார்க்கெட் அருகே ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி வி.சி.வி லே-அவுட். இப்பகுதியில் அருகருகே இரண்டு குப்பை தொட்டிகள் உள்ளது. இந்த இரண்டு குப்பைத்தொட்டிகளும் குப்பைகளால் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை ரோட்டிலேயே வீசி செல்லும் அவலநிலை தற்போது உள்ளது. இதனால் குப்பைகள் நடுரோட்டில் வந்து காலில் மிதிபடும் அளவுக்கு கிடக்கிறது.
அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சக்கரத்தில் குப்பைகளை இழுத்துக் கொண்டே செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் சாலை முழுவதும் குப்பைமயமாக காட்சி அளிக்கிறது.
மேலும் அப்பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இந்த குப்பை தேங்கி இருக்கும் பகுதிக்கு எதிர்புறமும், பக்கவாட்டிலும் எண்ணற்ற உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு வந்து உணவருந்தும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
இந்தப் பகுதியில் நடுநிலைப்பள்ளி ஒன்றும், திருமண மண்டபம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும், பொதுமக்களும் அந்த வழியாக நடந்து செல்வது வழக்கம். அப்படி செல்லும் பகுதியில் சாலை முழுவதும் குப்பையாக கிடப்பது மக்களுக்கு முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.
மேலும் குவிந்து வரும் குப்பை காரணமாக ஈக்கள், கொசுக்கள் ஆகியவை வீட்டில் எந்த நேரமும் மொய்த்து வருகிறது என கூறும் பொதுமக்கள், இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே கோவை மாநகராட்சியினர் அவ்வப்போது குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu