வரத்து குறைவு: கோவையில் அதிகரித்த மீன்கள் விலை
மீன் கடை - கோப்புப்படம்
தமிழகத்தில் மீன் பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், கோவை உக்கடம் சந்தைக்கு மீன்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
கோவை உக்கடத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லறை மீன் சந்தைகளுக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 70 டன் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் 250 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14 -ம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன்கள் இனப்பெருக்கத்துக்காக, தமிழக அரசு மீன்பிடித் தடைக்காலத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உக்கடம் மொத்த மற்றும் சில்லறை மீன் சந்தையில் மீன்கள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதுடன் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தினமும் 30 டன் வரையே மீன்களின் வரத்து உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் 150 டன் மீன்களே விற்பனைக்கு வருகின்றன. குறைவான அளவே மீன் வரத்து உள்ளதால், விலை சற்று அதிகரித்துள்ளது.
கடந்த வாரங்களில் கிலோ ரூ.700-க்கு விற்ற வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.400-க்கு விற்ற பாறை மீன் தற்போது ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திசாளை ரூ.200, நண்டு ரூ.800, கறுப்பு வாவல் ரூ.1100, இரால் ரூ.600, நெத்திலி ரூ.500, சங்கரா ரூ.500, அயிரை ரூ.300, விளமீன் ரூ.600-க்கு விற்பனையாகிறது. மீன்பிடித் தடைக்காலம் முடியும் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்றார்.
இதேபோல, கறிக்கோழி வரத்தும் குறைந்துள்ளதால் கடந்த வாரங்களில் கிலோ ரூ.200-க்கு விற்ற கோழி இறைச்சி, தற்போது ரூ.40 அதிகரித்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டிறைச்சி கிலோ ரூ.800-க்கு விற்பனையாகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu