நல்லகாத்து ஆற்றை சுற்றிலும் கம்பிவேலிகள்
கோவை மாவட்டம் வால்பாறையானது மிகசிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தேயிலை தோட்டங்கள், நீர்நிலைகள், காண்போரை கவரும் வகையில் உள்ளன. இவற்றை கண்டு ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள மணிகண்டபுரத்தை சேர்ந்த வினித்(வயது20), தனுஷ்(20), அஜய்குமார்(20), பெரியகளந்தையை சேர்ந்த சரத்(20), உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த நபில்(20) ஆகியோர் தனது நண்பர்கள் 10 பேருடன் வாலபாறைக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்தனர்.
அவர்கள் தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்து விட்டு, சோலையாறு சுங்கம் நல்லகாத்து ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 5 பேரும் ஆற்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நல்லகாத்து ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த இடத்தை அமைச்சர் முத்துசாமியும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறும், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுத்து நிறுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அப்போது நகர மன்ற முன்னாள் தலைவர் கோழி கடை கணேசன் நல்லகாத்து ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கம்பிவேலி அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் நல்லகாத்து ஆற்றுப்பகுதியை சுற்றிலும் சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு, 200 மீட்டர் தொலைவிற்கு கம்பிவேலி அமைக்கப்பட்டது.
மேலும் அங்கு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நல்லகாத்து ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலியை வால்பாறை தி.மு.க நகர செயலாளர் சுதாகர் மற்றும் முன்னாள் தி.மு.க நகர மன்ற தலைவர் கோழிகடை கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu