அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய பெண் யூடியூபர் கைது

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை  ஏமாற்றிய பெண் யூடியூபர் கைது
X

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட ஹேமலதா

யூடியூப் மூலம் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இன்றைக்கு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தள்ளி உள்ளது.

கோவையில் யூடியூப் மூலம் பழகி முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்ததாக, விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹேமலதா கடந்த 2020-ம் ஆண்டு மாடர்ன் மம்மி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அப்போது அவர் முதலில் பொழுது போக்கு அம்சங்களை மையமாக கொண்டு வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதற்கு பார்வையாளர்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்து வந்தது.

இந்நிலையில் ஹேமலதாவை ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் தொடர்பு கொண்டு, தங்களின் உற்பத்தி பொருட்களை யூடியூப் சேனல் மூலம் பிரபலப்படுத்தும்படி கேட்டு கொண்டது. எனவே அவரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளை புகழ்ந்து, அதனை சமூகவலை தளத்தில் வீடியோவாக பதிவு செய்தார். இதற்காக அவருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் வழங்கியது.

இது ஹேமலதாவிடம் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசையை தூண்டிவிட்டது. எனவே அவர் கோவையில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அங்கு உள்ள பொருட்களை யூடியூப் மூலம் பிரபலப்படுத்தினார். இதில் அவருக்கு பணம் கொட்டியது.

யூடியூப் மூலம் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையே, ஹேமலதாவை இன்றைக்கு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தள்ளி உள்ளது.

ஹேமலதா சமீபத்தில் யூடியூபில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எனது நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். உங்களின் பணத்துக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.300 சேர்த்து அந்த பணம் ரூ.1500 ஆக திருப்பி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதனை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலத்துக்கு பிறகும் ரொக்கத்தொகை வந்து சேரவில்லை. Female YouTuber arrested for defrauding public by claiming to give high interest on investmentஇதனால் அதிர்ச்சி அடைந்த பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா என்பவர் கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது தான் ஹேமலதா கணவர் ரமேஷ் மற்றும் உதவியாளர் அருணாச்சலம் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து யூடியூப் மூலம் போலி வாக்குறுதி கொடுத்து பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து யூடியூபர் ஹேமலதா, கணவர் ரமேஷ் மற்றும் அருணாச்சலம் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 45 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமிரா மற்றும் 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கோவை குற்றப்புலனாய்வு காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் ஹேமலதா தலைமையிலான கும்பல் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக, வாடிக்கையாளர்கள் 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ரூ.1½ கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

எனவே ஹேமலதா உள்பட 3 பேரிடமும் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!