கொப்பரை விற்பனையை ஒத்திவைக்க விவசாயிகள் கோரிக்கை

கொப்பரை விற்பனையை ஒத்திவைக்க விவசாயிகள் கோரிக்கை
X

தேங்காய் கொப்பரை - கோப்புப்படம் 

தேங்காய் விலை சரிந்துள்ள நிலையில் கொப்பரை விற்பனை செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை தற்காலிகமாக ஒத்திவைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் இருந்தாலும், கோவை, திருப்பூர் மாவட்டங்களில்தான் அதிக தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்களின் தேங்காய்களுக்கு மகசூல் அடிப்படையில் அதிக வரவேற்புள்ளது.

தமிழகத்தில் 4.10 லட்சம் ஹெக்டேரில் 12.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன. அதில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டேரில் 1.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன. மேலும் இந்த மாவட்டங்களில் முக்கிய தொழிலும் தென்னை விவசாயமாகவே உள்ளது..

வெள்ளை ஈ தாக்குதல், காண்டாமிருக வண்டு தாக்குதல் என பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு இடையே, தென்னை மரங்களில் விளையும் தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

ஓராண்டுக்கு முன்பு வரை தேங்காய் ஒன்று ரூ.18 வரை விற்பனையாகி வந்தது. ஆனால், தற்போது தொடர்ந்து 6 மாதங்களாக விலை குறைந்து ரூ.8 முதல் ரூ.12 வரை மட்டுமே விற்பனையாகிறது. தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நேரத்தில் நேபட் நிறுவனம் மூலம் அரசு கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ள 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரையை விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக திங்கள்கிழமை (டிசம்பர் 19) டெண்டர் அறிவித்துள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தேங்காய் விலை சரிவை தடுக்க கொப்பரைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவு விலையாக கிலோ ரூ.105.90 நிர்ணயம் செய்துள்ளன. ஆனால், கொள்முதல் செய்யும் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தால் தான் தேங்காய் விலை சரிவை தடுக்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

தேங்காய் விலை சரிந்துள்ள நேரத்தில் நேபட் நிறுவனம் மூலம் அரசு கொள்முதல் செய்துவைத்துள்ள கொப்பரையை விற்பனை செய்தால் தேங்காய் விலை மேலும் சரிவடையும் என வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், தேங்காய் விலை சரிவை தடுக்கும் நல்ல நோக்கத்தில்தான் அரசு ஆதரவு விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது. தேங்காய் விலை சரிவாக உள்ள நேரத்தில், ஆதரவு விலையில் அரசு கொப்பரை கொள்முதல் செய்யும். இதனால் வெளி மார்க்கெட்டில் தேங்காய் விலை உயரும்.

தேங்காய் விலை உயர்ந்த பிறகு அரசு கொள்முதல் செய்த கொப்பரையை விற்பனை செய்யும்போது அரசுக்கும் லாபம் கிடைக்கும். ஆனால், தற்போது தேங்காய் விலை சரிவாக உள்ள நேரத்தில் ஏற்கெனவே கொள்முதல் செய்து வைத்துள்ள 40 ஆயிரம் மெட்ரிக்டன் கொப்பரையை விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விலை குறைவாக உள்ள நேரத்தில் கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரையை விற்பனை செய்தால் அரசுக்கு இழப்பு ஏற்படும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!