கோவை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி

கோவை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை 

கோவை அருகே மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்ததால், யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது

கோவை பெரியநாயக்கன்பாளையம் வன சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி சமவெளி பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

கோவை பூச்சியூர் அடுத்த ராவத்தூர் குள்ளனூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு இன்று அதிகாலை நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை வந்தது. வெகுநேரமாக தோட்டத்தில் யானை சுற்றி திரிந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தோட்டத்தில் நின்ற காட்டு யானையை அங்கிருந்து வனத்தை நோக்கி விரட்டினர். யானையும் வனத்தை நோக்கி சென்றுவிட்டது. யானை சென்றதால் வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் சென்ற சில மணி நேரங்களுக்கு பிறகு, அந்த யானை மீண்டும் வனத்திற்குள் இருந்து ஊரை நோக்கி வந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பட்டா நிலத்திற்கு வந்த யானை, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது சென்று உரசி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்தது.

மின் கம்பம் விழுந்த வேகத்தில் யானை எழுந்திருக்க முடியாமல் தவித்தது. யானை மீது மின்கம்பம் விழுந்ததை பார்த்த அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த மக்கள் வேகமாக அருகே ஓடினர். ஆனால் அதற்குள்ளாகவே மின்கம்பத்தில் இருந்து யானை மீது மின்சாரம் பாய்ந்ததால், யானை துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

உடனடியாக மக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து மின்கம்பத்தை அப்புறப்படுத்தி விட்டு யானையின் உடலை மீட்டனர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் உதவி வன பாதுகாவலர் செந்தில் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியில் கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தன. அந்த துயர சம்பவமே இன்னும் நீங்காத நிலையில் கோவையில் மீண்டும் ஒரு யானை மின்கம்பம் விழுந்து, மின்சாரம் தாக்கி இறந்துள்ளது பொதுமக்களிடமும், வன ஆர்வலர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா