கோவையில் பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்

ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்
கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் எண்ணற்ற தனியார் கல்லூரிகள் உள்ளன. இங்கு திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். இதுதவிர தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் காலை நேரத்தில் பேருந்துகள் மூலம் வேலைக்கு சென்று, மாலை நேரத்தில் வீடு திரும்புகின்றனர்.
இதனால் காலை, மாலை நேரங்களில் கோவை மாநகர பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அலைமோதும். கூட்டம் எவ்வளவு தான் அதிகமாக காணப்பட்டாலும் அரசு பேருந்துகள் மிகவும் குறைந்த அளவு இயக்கப்படுகிறது. இதனால் அனைத்து பேருந்துகளிலுமே கூட்டம் அதிகமாக இருக்கும்.
குறைந்த அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அனைவரும் தனியார் பேருந்துகளிலேயே பெரும்பாலும் பயணித்து வருகிறார்கள்.
ஒருசில வழித்தடங்களில் தனியார் பேருந்துகளும் குறைந்த அளவே இயங்கி வருகிறது. எனவே பேருந்துகளில் கூட்டத்தை தவிர்க்க முடிவில்லை. இதனால் மாணவர்கள் வேறுவழியின்றி படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செல்ல வேண்டி உள்ளது.
இந்த நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்றது. அதில் கல்லூரி மாணவர்கள் கடைசி படிக்கட்டில் ஒற்றைக்காலை படியில் வைத்த படி பயணம் செய்தனர்.
இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கு ஏற்பவும், கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு ஏற்பவும் அவர்களின் பயணமானது இருந்தது. இதனை அந்த வழியாக சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால், சாலையில் ெசல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ஒரு அச்சத்துடனேயே செல்கின்றனர்.
எனவே போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, பள்ளி-கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பேருந்து படிக்கட்டு பயணத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu