தவறான அறுவை சிகிச்சையால் மூச்சுவிட சிரமம்: கலெக்டரிடம் இளம்பெண் புகார்
தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த செபியா
கோவை மாவட்டம் சவுரிப்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி செபியா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செபியாவிற்கு தைராய்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெறுவதற்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, அறுவை சிகிச்சையின்போது நிகழ்ந்த தவறால் கடந்த 3 ஆண்டுகளாக செபியா பேச முடியாமலும், மூச்சுவிட முடியாமலும் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி செபியா கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் , கடந்த 2019ஆம் ஆண்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தைராய்டு பிரச்சினைக்கு 2 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கழுத்து பகுதியில் துளையிட்டு தற்காலிகமாக குழாய் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வலி ஏற்பட்டதால் கழுத்து துளை அடைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு பேச முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, அறுவை சிகிச்சையின்போது மூச்சு குழாய் நரம்பில் சிறிய துண்டிப்பு ஏற்பட்டதாகவும், சில நாட்களில் சரியாகி விடும் என தெரிவித்தனர். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பேசவும், மூச்சு விடவும் முடியாமல் தவித்து வருகிறேன். இதனால் வேலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பெண் குழந்தைகளுடன் சிரமப்படுகிறேன்.
எனவே சம்பந்தப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம், அல்லது தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu