கோவை பகுதியில் காட்டுயானை நடமாட்டத்தை தடுக்க தீர்வு என்ன?
கோப்புப் படம்
கோவை பகுதியில் ஆனைகட்டி, வீரபாண்டி, தடாகம், மடத்துார், நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம் நரசிம்மநாயக்கன்பாளையம், கோவனுார், தெக்குப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளதால் இப்பகுதியில் தென்னை, வாழை, சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் துாக்கத்தை தொலைத்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
யானைகள் வருவதை தடுக்க அகழி வெட்டுவது, விவசாயிகளுக்கு ராட்சத 'டார்ச்' லைட் அளிப்பது, யானைகள் வரும்போது அவற்றைதடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவது போன்ற பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகமாக இருந்ததால், அங்கு கும்கி யானைகளின் முகாம் அமைக்கப்பட்டு, காட்டு யானைகள் ஊருக்குள் ஊடுருவினால், அவற்றை விரட்டியடிக்கும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. இதனால் தற்போது காட்டு யானைகளின் ஊடுருவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, தடாகம் பகுதியில் கோவை வனச்சரகத்துக்குட்பட்ட மாங்கரையில் கும்கி யானைகளின் முகாம் அமைக்க வனத்துறையினர் முன்வர வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு யானைகள் தொல்லை அதிகமாக இருந்தபோது, கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு, காட்டு யானைகளை விரட்டின. அதேபோல, தற்போது மாங்கரையில், கும்கி யானைகள் முகாமை நிரந்தரமாக ஏற்படுத்தினால், காட்டு யானைகளின் வரவை முழுமையாக தடுக்க முடியும் என, விவசாயிகள் ஆலோசனை கூறுகின்றனர்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,சில ஆண்டுகளுக்கு முன் தடாகம் அருகே அனுவாவி சுப்பிரமணியர் மலைக்கோயில் அடிவாரத்தில் கும்கி யானைகள் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை என்பதால் திட்டம் கைவிடப்பட்டது.
கும்கி யானைகளை களத்துக்கு நேரடியாக கொண்டு சென்று காட்டு யானைகளை விரட்ட வேண்டிய அவசியம் இல்லை. மாங்கரை முகாமில் கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டாலே, காட்டு யானைகள் தங்களது நுகர்வு சக்தியால் கும்கி யானைகள் இருப்பதை உணர்ந்து மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்குவதை தவிர்க்கும். இதுகுறித்து, வனத்துறையினர் யோசித்து நடவடிக்கை எடுத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu