காரமடை அருகே குளத்தில் சுற்றித்திரியும் முதலை

காரமடை அருகே குளத்தில் சுற்றித்திரியும் முதலை
X

காரமடை அருகே குளத்தில் தென்பட்ட முதலை 

குரும்பபாளையம் குட்டையில் முதலை நடமாட்டம் தென்பட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காரமடை அடுத்த பெள்ளாதி பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு உடைய பெரிய குளம் அமைந்து உள்ளது. இது சுமார் 30 அடி உயரம் கொண்டது.

கட்டாஞ்சிமலை, மருதூர், திம்மம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், ஏழுஎருமைப்பள்ளம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் இருந்து பெள்ளாதி குளத்துக்கு நீர்வரத்து உள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. எனவே அந்த பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெள்ளாதி குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து தற்போது ஒட்டுமொத்த நீர்நிலையும் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அங்கு தேங்கும் உபரிநீர் தண்ணீர் மறுகால் பாய்ந்து குரும்பப்பாளையம் குட்டைக்கு செல்கிறது.

இந்த நிலையில் குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளக்கரைக்கு சென்றபோது அங்கு உள்ள ஒரு பாறையில் பெரிய முதலை சாவகாசமாக படுத்திருந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் குரும்பபாளையம் குட்டையோரத்தில் கிடந்த முதலையை செல்போனில் படம் பிடித்தனர்.

அப்போது அது திடீரென தலையை தூக்கி பார்த்தது. பின்னர் பாறையில் இருந்து வெளியேறி தண்ணீருக்குள் சென்று விட்டது. அங்கு தற்போது நீந்தியபடி குளத்தை சுற்றி வருகிறது.

மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்டு வெள்ளம் குரும்பபாளையம் குட்டைக்கு வருகிறது. எனவே காட்டுக்குள் பதுங்கியிருந்த முதலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மேற்கண்ட குட்டைக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குரும்பபாளையம் குட்டையில் முதலை நடமாட்டம் தென்பட்டிருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

குரும்பபாளையம் குளத்தில் பதுங்கி நிற்கும் முதலையை தேடி பிடித்து அடர்ந்த காட்டுக்குள் உள்ள அணையில் பத்திரமாக விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்