கோவை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்
வாளையார் சோதனை சாவடி - கோப்புப்படம்
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் மாவோயிஸ்ட் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பெண் மாவோயிஸ்டுகள் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.
அவர்களை தேடும் பணியை சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தையொட்டிய நீலகிரி, கோவை மாவட்ட வனப்பகுதிகளிலும் தமிழக வனத்துறையினர் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் குண்டு அடிபட்டு காயம் அடைந்த 2 மாவோயிஸ்டுகள் கோவை மாவட்ட எல்லைப்பகுதிக்குள் நுழைந்து விடாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சி.ஐ.டி, நுண்ணறிவு பிரிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு, க்யூ பிரிவு காவல்துறையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக கேரளா எல்லை பகுதியான வாளையார், பொள்ளாச்சி, ஆனைகட்டி, வேலந்தாவளம், காகா சாவடி காரமடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆட்சியர் கிரந்திகுமார் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 14 சோதனை சாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு கூடுதலாக 160 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் பயணிகள் முழுமையாக சோதனை செய்து அனுப்பப்பட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu