அரைகுறையாய் முடிக்கப்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பாலம்: அறிக்கை கேட்கிறார் ஆட்சியர்

அரைகுறையாய் முடிக்கப்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பாலம்: அறிக்கை கேட்கிறார் ஆட்சியர்
X

பெரியநாயக்கன்பாளையம் பாலம்

பல ஆண்டு இழுபறிக்குப் பின் கட்டி முடிக்கப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் பாலத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையான மேட்டுப்பாளையம் ரோட்டில், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், தற்போது, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் வண்ணான் கோவில் பிரிவு வரை, 1.85 கி.மீ., தூரத்துக்கு ரூ.115.6 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று இந்த பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நடக்கவில்லை.

வண்ணான் கோவில் பிரிவில் பாலம் இறங்கும் பகுதியில், சர்வீஸ் ரோடு ரோட்டில் இணையும் பகுதி, மிகமிகக் குறுகலாகவுள்ளது. பாலத்திலிருந்து இறங்கும் வாகனங்களும் ஒரே இடத்தில் சந்திப்பதால், விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது.

அந்த இடத்தில் சர்வீஸ் ரோட்டை சிறிது தூரத்துக்கு நீட்டித்த பின், மேட்டுப்பாளையம் ரோட்டில் இணைத்தால் மட்டுமே, விபத்துக்களைத் தடுக்க முடியும். அத்துடன் வண்ணான் கோவில் பிரிவில் மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்லும் சர்வீஸ் ரோட்டில், மழை நீர் வடிகால் பணி முடியாமல் உள்ளது. அதை முடிக்காவிட்டால், மீண்டும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இதையடுத்து அந்த இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை, சாலை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ஆட்சியர் கிரந்திகுமார் உத்தரவிட்டார்.

இதன்படி, சாலை பாதுகாப்பு கோட்டப் பொறியாளர் மனுநீதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (பொறுப்பு) செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் முரளிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

சர்வீஸ் ரோட்டை 40-50 மீட்டர் தூரத்துக்கு நீட்டிப்பதற்கு, அப்பகுதியில் 200-250 சதுர மீட்டர் அளவுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டுமென்பதைக் கண்டறிந்தனர்.

அந்த இடத்தில் உள்ள 10 கடைகள் கட்டப்பட்டுள்ள இடம், பட்டா நிலங்களா அல்லது நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களா என்பதை ஆய்வு செய்வதற்கு, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களைக் கோரியுள்ளனர். பட்டா நிலமாக இருப்பின், அவற்றைக் கையகப்படுத்தி, சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஆட்சியர் கிரந்திகுமார் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலை பாதுகாப்பு கோட்டப் பொறியாளர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில், அந்த இடத்தில் விபத்து ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த அறிக்கையைப் பார்த்த பின்புதான், பாலத்தைத் திறப்பது பற்றியும் முடிவெடுக்க முடியும் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!