தமிழ்நாட்டை பிரிக்க பாஜக நினைக்கவில்லை - வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ
கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் உள்ள, பாஜக தலைமை அலுவலகத்தில், ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேஷின் உருவபடத்துக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது: ஆடிட்டர் ரமேஷ் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை பாஜகவினர் திரட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக கோவில்கள் இடிக்கப்படுவதற்கு பதிலாக, கோவில்களை அழகுபடுத்தும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செல்போன் தரவுகள் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை வெளியிடும்.
கொங்குநாடு விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை.கட்சியின் பொறுப்பாளராக கருத்தை தெரிவிக்க முடியும். தமிழ்நாட்டை தனியாக பிரிக்க வேண்டும் என பாஜக நினைக்கவில்லை. ஆனால் கொங்கு பகுதி மக்களின் வளர்ச்சி,தேவைகள், அபிலாஷைகள் என பல்வேறு பிரச்சனைகள் பல ஆண்டு ஏக்கமாக உள்ள நிலையில் வருங்காலத்தில் மாநில அரசு அவற்றை எவ்வாறு நிறைவேற்ற போகிறது என்பதை பொறுத்தே கொங்குநாடு குறித்து அடுத்தகட்ட பரிசீலனை வரலாம்.
திமுக குறித்து விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளம்பரம் தேடுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து ஏற்கமுடியாது. பாஜகவையும் பிரதமரையும் திமுகவினர் விமர்சிப்பது விளம்பரத்துக்காகவா என வானதி சீனிவாசன் கேட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu