கோவை தெற்கு தொகுதியில் டோக்கன் விநியோகம் - காங்கிரஸ் வேட்பாளர் மறியல் போராட்டம்

கோவை தெற்கு தொகுதியில்  டோக்கன் விநியோகம் - காங்கிரஸ்  வேட்பாளர்  மறியல் போராட்டம்
டோக்கன் மூலம் பணம் விநியோகிக்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்த காங்கிரஸ் வேட்பாளர் மறியல் போராட்டத்தில் ஈடபட்டார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் டோக்கன் மூலம் பணம் விநியோகிக்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று வைசியாள் வீதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது அவருடன் மறியல் போராட்டத்தில் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

மறியல் போராட்டத்தின் போது பாஜகவினர் டோக்கன் முறையில் பணம் வினியோகம் செய்வதாகவும் ஸ்ரீ கணபதி ஏஜென்ஸிஸ் என்ற ஒரு நிறுவனம் மூலம் பணப் பட்டுவாடா நடப்பதாகவும், இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதே பிரச்சனைக்காக அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல்வகாப், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் சேர்ந்து் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்..

இரு கட்சியினரும் ஒரே நேரத்தில் வைசியாள் வீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் கோவை மாநகர துணை ஆணையர் உமா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் பணம் கொடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினரும், நாம் தமிழர் கட்சியினரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story