கோவை மூன்றாவது அலையில் அதிகம் பாதிக்க வாய்ப்புண்டு
கண்காணிப்பு அலுவலர் சித்திக்
கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான சித்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்திக், கோவை மாவட்டத்தில் சராசரியாக 200 புதிய நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
கோவையில் மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கின்றது எனவும், சென்னையில் கோவிட் எதிர்ப்பு சக்தி 78 சதவீதமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால் கோவையில் 3 வது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு எனவும், இதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்த அவர், ஒரு மாதத்திற்குள் கூட 3 வது அலை வர வாய்ப்புண்டு எனவும் தெரித்தார்.
முககவசம் கட்டாயம், தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்த அவர், தற்போது முழு ஊரடங்கு இல்லாமல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது எனவும், இதை தொடர்ந்தால் முழு ஊரடங்கை தள்ளிவைக்கவும், தவிர்க்கவும் வாய்ப்புண்டு என தெரிவித்தார். கோவையில் தற்போது எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கும் நிலையில் இதை அதிகரிக்க தடுப்பூசி மட்டுமே வழி எனவும் தெரிவித்த அவர், கோவைக்கு தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.3 வது அலை ஓரே மாதத்தில் கூட வரலாம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், அரசு மருத்துவமனை, இ.எஸ்ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அரசு மருத்துவமனை, இ.ஸ்.ஐ மருத்துவமனைகளில் தேவையான ஆக்ஸிஜன் படுக்கை, வென்டிலேட்டர்கள் இருகின்றது என தெரிவித்த அவர், ஒரு வாரத்தில் படுக்கைகளை உயர்த்தி கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். ஆக்ஸிஜன் டேங்க் ஓன்று சென்னையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றது எனவும் தெரிவித்தார். கோவையில் முன் தயாரிப்புகள் இருப்பதால், நிறைய உயிர் சேதம் இல்லாமல் 3 வது அலையை நம்மால் எதிர் கொள்ள முடியும். அடுத்த 2 மாதங்களுக்கு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதை எதிர் கொள்ள தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 82 ஐ.சி.யு படுக்கைகளும் தயாராக இருக்கின்றது எனவும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை 40ம், ஐ.சி.யு படுக்கைகள் 30ம் குழந்தைகளுக்கு தயாராக இருக்கின்றது எனவும், தேவையான மருத்துவர்களும் கோவையில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu