விவசாயிகள் உயிரிழப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் நிலையம் முற்றுகை

விவசாயிகள் உயிரிழப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் நிலையம் முற்றுகை
X

எஸ்டிபிஐ கட்சியினர் கோவை இரயில் நிலையம் முற்றுகை.

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் வன்முறையாக மாறியது.

மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளான் திருத்தச் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய விவசாயிகள் திக்குனியாவில் கூடினர்.

மஹாராஜா அக்ரஸேன் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்ட காரணத்தால் துனை முதல்வர் கேசவ் மவுரியா ஹெலிகாப்டர் பயணத்தை கைவிட்டு சாலை மார்க்கமாக சம்பவ இடத்திற்கு வந்தடைந்தார். விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்த நிலையில், துணை முதலமைச்சரை வரவேற்க மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அந்த இடத்திற்கு வந்தடைந்தார். அப்போது மிஸ்ராவின் கார் ஏறியதில் மூன்று விவசாயிகள் உயிரிழந்ததால், எதிர்ப்பாளர்கள் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்ததில் பல விவசாயிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையத்தை 50க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தை கண்டித்தும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் விவசாய சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்