கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி
ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மத்திய மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப்பணிகளை ரத்து செய்யக்கூடாது, தொகுதிகளில் அரசு பணி துவக்க நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கூட்டாக, கோவை ஆட்சியர் சமீரனிடம் நேற்று மனு அளித்தனர்.
அப்போது, ஆட்சியர் சமீரன் தனது இருக்கையில் அமர்ந்தவாறு மனுவை பெற முயன்றார். இதற்கு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மனு கொடுக்கும் போது இப்படித்தான் அமர்ந்தவாறு வாங்குவீர்களா? இது என்ன புது பழக்கமாக உள்ளது என, முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசமாக கேட்டார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஆட்சியர் சமீரன், உடனடியாக எழுந்து நின்று மனுவை பெற்று கொண்டார். இதனால், கோவை ஆட்சியரின் அறையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அளித்த பேட்டி: கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களை அதிகரித்தல், அரசு நிகழ்வுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். பொதுமக்களை காக்க வைக்காமல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என, ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம்.
தற்போதைய அரசு, மக்களுக்கு தேவையான திட்டங்களை ரத்து செய்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தவிர்த்துவிட்டு, எந்த பதவியிலும் இல்லாத நபர்களை உடன் வைத்துக் கொண்டு பூமி பூஜை உள்ளிட்ட அரசு நிகழ்வுகளை நடத்துவது தவிர்க்க வேண்டும். திமுக அரசால் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயம் தங்களுக்கும் மக்களுக்கும் உள்ளது என்று வேலுமணி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu