கனிம வளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலானவை அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனால் தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் விதிமுறைகளை மீறி கனிம வளங்கள் சுரண்டப்படுவதாக பல்வேறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த கனிம வளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம், தடாகம் பள்ளத்தாக்கு கனிமவள மீட்புக் குழு, சமூகநீதி பஞ்சமி நில மீட்பு இயக்கம், கௌசிகா நதி உழவர் குழு, கோவை மாவட்ட இருளர் சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை தடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த கொள்ளைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் தடாகம் பகுதியில் செயல்பட்டுவரும் செங்கல் சூளைகள் பெரும்பாலானவை அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் அளவுக்கு அதிகமாக அங்குள்ள கனிமங்களை எடுப்பதாகவும், இதனால் தடாகம் பள்ளத்தாக்குப் பகுதி பாலைவனமாக மாறி வருவதாகவும் தெரிவித்தனர்.
செங்கல் சூளைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், அனுமதி பெறாத சூளைகளை முட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இந்த அதிகாரிகள் இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும், இல்லையென்றால் அந்தப் பகுதியே பாலைவனமாக மாறி விடும் என்று தெரிவித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu