தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட நம்ம கோவை இணையதளம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட நம்ம கோவை இணையதளம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
X

நம்ம கோவை தளத்தை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்.

உதவிகள் தேவைப்படும் நபர்களுக்கும், நிதி உதவிகளை வழங்க தயாராக இருக்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக செயல்படுகிறோம். 

கோவை மக்களுக்காக, கோவை மக்களே மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நம்ம கோவை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வணிக கார்ப்பரேட் நிறுவனங்கள், வர்த்தக மற்றும் தொழில் அமைப்புகள், விவசாயிகள், பல்வேறு சங்கங்கள் நிறுவனங்கள், பல்துறை வல்லுநர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கோவையின் நலனுக்காக இணைந்து பணியாற்றும் ஒரு பொதுவான அமைப்பாக உள்ளது.

கோவை பகுதிகளில் எந்தப் பிரச்சனையென்றாலும், எல்லா வழிகளிலும் முயன்று தீர்வு காணப்படுகிறது. சில பணிகளை அரசுடன் இணைந்தும், சக தன்னார்வலர்களுடன் இணைந்தும், சிலவற்றை நேரடியாகவும் செய்து வருகின்றது. மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இயங்கினால் அனைவருக்கும் சிறந்த முறையில் பயனளிக்கலாம் எனும் எண்ணத்தில் 2016-ம் ஆண்டு "நம்ம கோவை" என்ற வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டு, பல்வேறு நலப் பணிகள் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக உதவும் எண்ணத்துடன் இருப்பவர்கள் அனைவரும் அணுகும் வகையில் நம்ம கோவை தளத்தை உருவாக்கியுள்ளனர். இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அவ்வமைப்பினர் கூறுகையில், மக்களுக்கான தேவையை ஆராய்ந்து உதவி வருகிறோம். கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு போன்ற உதவிகள் தேவைப்படும் நபர்களுக்கும், அதற்கான நிதி உதவிகளை வழங்க தயாராக இருக்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக செயல்படுகிறோம். சாதிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்கள், அதற்கான வாய்ப்பு இல்லாதவர்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வெளிப்படைத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் தக்க சமயத்தில் உரிய நபர்களுக்கு சரியானதைச் செய்வதை உறுதியளிக்கிறோம்.

எல்லோரும் அவரவரால் முடிந்த பணிகளைச் செய்து கோவையை உயர்த்துவதே இதன் நோக்கம். உதவி தேவைப்படும் நபர்கள் மற்றும் அதன் விவரங்களை இங்கே தெரியப்படுத்திவிடுவோம். நம்ம கோவை அமைப்பு, உதவி கோரிக்கைகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும். உதவி செய்ய முன்வருபவர்கள் உதவி தேவைப்படுவோரை தேர்ந்தெடுத்து அவர்களால் இயன்ற உதவிகளை அளிக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் சோமனுர் ரோட்டரி சங்கம் மூலமும், கோவிட் தொற்றில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் வகையில் சுப்ரீம் மொபைல்ஸ் மூலம் 9 கைபேசிகளும், கீர்த்திலால் ஜுவல்லரி மூலம் 1 கைபேசியும் வழங்கப்பட்டன. மேலும் கோவிட்டால் கணவனை இழந்த 2 குடும்ப தலைவிகளுக்கு கீர்த்திலால் ஜுவல்லரி மூலம் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story