கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்
X

கோவை மாநகர பகுதி

கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்.

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில், கோவையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் கோவை மாவட்டத்திலும் காணப்படுகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் விதிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, ஒப்பணக்கார வீதி, சாரமேடு சாலை, ராமமூர்த்தி சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி. இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிபுதூர் மேம்பாலம் வரை, ஹோப் காலெஜ் சிக்னல் கடைகள், காளப்பட்டி சாலை, டி.பி. சாலை, திருவேங்கடசாமி சாலை, என்.எஸ்.ஆர். சாலை, ஆரோக்கிய சாமி சாலை, சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பேருந்து நிலைய சந்திப்பு, துடியலூர் சந்திப்பு, மார்கெட் கடைகள், பீளமேடு ரொட்டி கடை மைதான கடைகள், காந்தி மாநகர் சந்திப்பு, ஆவராம்பாளையம் சந்திப்பு, கணபதி, பாப்பநாய்க்கன்பாளையம் சந்திப்பு, ராஜ வீதி, பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் சாலை, இடையர் வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, மரக்கடை வீதி, காந்திபுரம், சலீவன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நகைகடைகள் மற்றும் துணிக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பூங்காக்கள், மால்கள் ஆகியவையும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை மற்றும் அனைத்து வார சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உணவகங்கள் மற்றும் அடுமணைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கவும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வடை பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடை பணியாளர்களும் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மார்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்கள் மட்டும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்கவும், உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு வரும் கேரள பயணிகள், விமானம், ரயில் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கபட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தினசரி வந்து செல்ல அனுமதியில்லை. மாணவர்கள் விடுதிகளில் தங்குபவர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கேரளாவில் இருந்து வரும் கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது உடன், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெறுவதை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து திருமண மண்டபங்களிலும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வட்டாச்சியரிடம் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடந்தால் மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 50 பேருக்கு மிகாமல் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!