கோவையில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

கோவையில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
X

புலியகுளம் விநாயகர் கோவில்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவையில் பிரசித்தி பெற்ற புளியகுளம் விநாயகர் திருக்கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மூலவருக்கு எருக்கம் பூ, அறுகம்புல் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிரசிதிபெற்ற புளியகுளம் விநாயகர் கோவிலில் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபாடு செய்து வருகின்றனர். அதேசமயம் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும், அதே போல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை உள்ளது. இந்த சூழலில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதேபோல், தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகளை அகற்ற காவல்துறையினர் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் அடங்கிய 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடையை மீறி வைக்கப்படும் சிலைகளை எடுத்துச் செல்ல வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்படும் விநாயகர் சிலைகள் இந்து அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு மொத்தமாக நீர்நிலைகளில் கரைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!