கொரோனா தடுப்பூசி போட இலவச வாகன வசதி- பாஜக சார்பில் துவக்கி வைப்பு

கொரோனா தடுப்பூசி போட இலவச வாகன வசதி-  பாஜக சார்பில் துவக்கி வைப்பு
கோவையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள செல்பவர்களுக்கான இலவச வாகன சேவையை, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது தடுப்பூசி நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு செல்வதற்கான இலவச வாகன சேவை மற்றும் பொது மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகன சேவை, பா.ஜ.க சார்பில் இன்று கோவையில் துவங்கப்பட்டது.

இந்த வாகனத்தை அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கான பல்வேறு உதவிகளை பா.ஜ.க செய்து வருகிறது. குறுகிய காலத்தில் 12 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோவை மக்களுக்கு தடுப்பூசி செலுத்த செல்வதற்கு இலவச வாகனம் இன்று துவங்கப்பட்டுள்ளது. உதவி மையத்தையோ அல்லது பா.ஜ.க அலுவலத்தையோ தொடர்பு கொண்டு இந்த சேவையை பெறலாம். அதோடு, தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு வாகனமும் துவங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.

Tags

Next Story