கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்த படம்
கோவை மாவட்ட அதிமுக சார்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் இன்று கோவை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினர். பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை மாவட்ட அதிமுக சார்பில் 25 ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் இதனைதொடர்ந்து ஆட்சியரை சந்தித்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம் என தெரிவித்தார்.
அதிமுகவை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் கொரொனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகள் செய்யும் போது தடுத்து நிறுத்தப்படுகின்றனர் என தெரிவித்தார். மேலும் தொண்டாமுத்தூரில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனத்தை காவல் துறை தடுத்து நிறுத்துகின்றனர். சூலூரில் காய்கறி விநியோகம் செய்ய அனுமதி மறுக்கின்றனர். கவுண்டம்பாளையம் தொகுதியில் பொது மக்களுக்கு உதவிகள் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றது என குற்றம்சாட்டினார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதவிகள் செய்யும் போது அவற்றை தடுத்து நிறுத்தி திமுகவினர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று அதிகம் இருக்கின்றது என கூறிய அவர், பாசிட்டிவ் கேஸ்களை நெகட்டிவ் என்று சொல்லி அனுப்புகின்றனர் எனவும், பாசிட்டிவ்வாக இருந்து சிகிச்சை பெற்று இறந்த பின்னர் அதை நெகட்டிங் என சான்றிதழ் கொடுப்பதால் அவர்களால் உதவி தொகை கூட பெற முடியாத நிலை இருக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி போடுமிடம், ரேசன் கடைகளில் எல்லாம் திமுகவினர் தலையீடு இருக்கின்றது எனவும், இவற்றை தட்டிக்கேட்டால் பொய் வழக்குகள் போடுகின்றனர் எனவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய அவர், திமுக தூண்டுதலில் போடப்படும் பொய் வழக்குகளை காவல் துறை நிறுத்தி கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu