பாகுபாடு பார்க்காத ஸ்டாலின்: மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்
கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காக, கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்திக்க, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
அதை தொடர்ந்து, தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும் எனவும், தடுப்பூசிகள் அதிகளவில் கோவை மக்களுக்கு போட வேண்டும் எனவும் அதை கூடுதல் மையங்கள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஊரடங்கு அறிவிப்பால் அத்தியாவசிய பொருட்களை, பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலே மக்களுக்கு காய்கறிகள் வண்டிகள் மூலமாக வழங்க, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா உணவகத்தை அதிமுக ஏற்று நடத்த அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆட்சியரிடம் வழங்கினர்.
பின்னர், எஸ் பி வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க. வேண்டும். மின் மயானத்தில் சடலங்கள் எரிக்க இடம் இல்லாமல் உள்ளது. அதிகமான வாகனங்களை வைத்து கிருமி நாசினி மருந்துகள் அடிக்க வேண்டும்.
ஆக்சிசன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். இறப்புகள் அதிகம் வருகிறது. முறையான கணிப்புகள் நடத்த வேண்டும். கூடுதலாக பரிசோதனை நடத்த வேண்டும். அதிமுகவினரை பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய அனுமதி அளிப்பதில்லை. நாங்கள் அனுமதி கேட்கும் இடத்தில் இருக்கிறோம். பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்க சென்றால் காவல்துறை வழக்கு பதிவு செய்வதாக எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கோவை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிக்கு இரண்டு அமைச்சர்கள் நியமித்து, ஆலோசனை கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறோம். கோவை சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றாலும், முதலமைச்சர் ஸ்டாலின் பாகுபாடு பார்ப்பதில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தால்தான் கொரோனா தொற்று குறையும். அரசு போட்ட உத்தரவுகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வேலுமணி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu