பெட்ரோல் விலை கூடிப்போச்சாம் : சைக்கிளில் வந்து வேட்புமனு

பெட்ரோல் விலை கூடிப்போச்சாம் :  சைக்கிளில் வந்து வேட்புமனு
X
கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்

கோவையில் தெற்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக சைக்கிளில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

காமராஜர் பவன் அலுவலகத்திலிருந்து சைக்கிளில் ஊர்வலமாக கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வந்தார். 100 மீட்டருக்கு முன்னதாக ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது. வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ சுப்பிரமணியத்திடம் மயூரா ஜெயக்குமார் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அளித்தார். பின்னர் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தவறிய நிலையில் அதை கண்டிக்கும் விதமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக சைக்கிளில் ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தேன். மக்கள் இந்த ஆட்சியில் பல்வேறு சிரமங்களுடன் வாழ்கின்றனர். தெற்கு தொகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக சேவை செய்து உள்ளேன். பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று சிறை சென்றுள்ளேன். என்னை எதிர்த்து போட்டியிடும் யாரும் எந்தவிதப் போராட்டத்திலும் பங்கு பெற்று சிறை சென்றதில்லை. தேர்தல் முடிந்தவுடன் வானதி சீனிவாசன் தேர்தலை முடித்துவிட்டு டெல்லி சென்றுவிடுவார். கமல்ஹாசன் நட்சத்திர அந்தஸ்தை நம்பி மட்டும் தொகுதியில் நிற்கிறார். தேர்தல் முடிந்தவுடன் சென்னை சென்று விடுவார்.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூற திணறிய மயூரா ஜெயக்குமாருக்கு பதிலாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் பதில் கூறினார். பிரதமர் மோடியும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். அவராலும் அந்த தொகுதியில் பணி செய்ய முடியவில்லை எனவும் பெட்ரோல் டீசல் விலையை கடுமையாக உயர்த்திய இந்த அரசுகளுக்கு மக்கள் வாக்களிப்பது மூலமாக பதில் கூறுவார்கள் என தெரிவித்தார்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!