கோவை: இதுவரை 43 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல்

கோவை: இதுவரை 43 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல்
X
கோவை மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 43 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேட்டி.

சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு ராட்சச பலூனை பறக்க விடப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 43 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன எனவும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி 14 ம் தேதியும், இரண்டாம் கட்ட பயிற்சி 26 ம் தேதியும் நடைபெற உள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும், கோவை மாவட்டத்தில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட 64 ஆயிரத்து 650 பேரில் விருப்பம் உள்ளவர்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான கோவை மாநகர பகுதிகளில் வாக்குச் சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும், கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 120 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும் கூறிய அவர், சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் தொடர்பாக தகவல் அளிக்க வேண்டும் என அனைத்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags

Next Story