இந்தாண்டு ரூ.11500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி
கோவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் துடியலூர் கூட்டுறவு விவசாய ஸ்தாபனம் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரொனா நிதி ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்படாமல் இருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் கடன் கடந்த ஆண்டு ரூ.9500 கோடி மட்டுமே வழங்கிய நிலையில், இந்த ஆண்டு ரூ.11500 கோடி பயிர் கடனை வழங்க முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலையினை பார்வையிட்டதாகவும், நியாய விலை கடைகளில் தமிழகம் முழுவதும் சேல்ஸ் மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும். விவசாயிகளுக்கு எல்லா வகையிலும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும் எனவும், இந்த துறை முதல்வர் இடும் ஆணையை மக்களிடம் கொண்டு செல்லும் எனவும் தெரிவித்தார்.
கூட்டுறவு துறையின் மூலமாக செயல்படும் சுய உதவிகுழுக்களின் எண்ணிக்கையினை 55 ஆயிரத்தில் இருத்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுய உதவி குழு சிறப்பாக செயல்படும், படித்த இளைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் எந்த தவறுக்கும் இடமளிக்காமல் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.
குடும்ப அட்டை இல்லாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை கிடைக்க உணவுதுறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 4451 விவசாய கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள விதி மீறல்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. வரும் 31 ம் தேதி அந்த ஆய்வு முடிவுகள் வந்த பின், அதில் உள்ளவை குறித்து தெரிவிக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
மேலும், வேப்பபுண்ணாக்கு தயாரிப்பை அதிகரிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. தரமான விதைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நீண்டகாலமாக ஒரே கூட்டுறவு சங்கத்தில் உள்ள பணியாளர்களை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். திமுக ஆட்சியில் கூட்டுறவு தேர்தல் முறைப்படி நடக்கும் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu