கோவையில் கொரோனா பாதிப்புகள் குறையத் துவங்கியுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி
கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்., பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது.,
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வார காலமாக குறைந்து வருகிறது எனவும், கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று குறைந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
கோவையில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்றைவிட இன்று 800 குறைவாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அனுமதிக்கப்படாத ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதே கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்றார்.
தொழில் நிறுவனங்கள் நாளை முதல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அனுமதி இல்லாமல் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் என எச்சரித்தார்.கொரோனா பாதித்த நோயாளிகள் ஆட்டோக்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வர படுவதால் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக கூறினார்.
சென்னையில் உள்ளது போல கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை கோவையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் கோவைக்கு வரவழைக்கப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கோவையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில், அங்கு பணிபுரியும் நபர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் 10 நாட்களுக்கு கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் வீணடிக்காமல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்த அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளதாக குற்றம்சாட்டிய மா சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்தொற்றுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, மருத்துவமனைகள் சம்பாதிப்பதற்கான நேரம் இதுவல்ல, மனசாட்சியின் படி மருத்துவமனை நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu