'12 வருஷம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தேன், கொரோனாவுக்கு கொடுத்திட்டேன்' : பள்ளி மாணவி நெகிழ்ச்சி

12 வருஷம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தேன், கொரோனாவுக்கு கொடுத்திட்டேன் : பள்ளி மாணவி நெகிழ்ச்சி
X
கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுமரேகா உயர்கல்விக்காக உண்டியலில் 12 ஆண்டுகளாக சேமித்து வந்த 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.இதன் பேரில் திரைப்பட நடிகர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களான நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலமுரளி. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களது 17 வயது மகள் சுமரேகா காங்கேயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் சேமிப்பு பழக்கம் கொண்ட சுமரேகா, ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பெற்றோர்கள் அவ்வப்போது கொடுத்த பணத்தை உண்டியலில் சேமித்து வந்துள்ளார். ஐஏஎஸ் படிக்க வேண்டுமென்பதற்காக அப்பணத்தை சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை தொலைக்காட்சி செய்திகளில் சுமரேகா பார்த்துள்ளார்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பை அளிக்க வேண்டுமென்ற முனைப்பில், உண்டியலில் சேமித்த பணத்தை கொடுக்க முன் வந்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து சுமரேகா 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!