வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் : 2 போலீஸ் அதிகாரிகள் கைது
வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். கடந்த பிப்ரவரி 27ம் தேதி காந்திபார்க் பகுதிக்கு டூவீலரில் வந்தார். அப்போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் இருளப்பன் சோதனை செய்தார். ஸ்ரீதர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவரது பைக்கை இருளப்பன் பறிமுதல் செய்தாராம்.
ஆனால் தான் மது அருந்தவில்லை என ஸ்ரீதர் கூறிய போதும், பைக்கை தருவதற்கு 3 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் வந்து பைக்கை பெற வேண்டும் என்றால் 6 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று இருளப்பன் கூறியுள்ளார். பின்னர் ஸ்ரீதர் வெரைட்டி ஹால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் பைக்கை கேட்டுள்ளார். அப்போது, வழக்குப்பதிவு செய்து கோர்ட்டுக்கு போனால் 14 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால், 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் பைக்கை தருவதாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கணேசன் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீதர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீதர் வெரைட்டி ஹால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ரசாயணம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் பணத்தை சப் இன்ஸ்பெக்டர் இருளப்பன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறி பறிமுதல் செய்த பைக்கை தனியார் பார்க்கிங்கில் மறைத்து வைத்து லஞ்சம் பெற இருவரும் முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu