எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய ஒப்பந்ததாரர் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய ஒப்பந்ததாரர் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு நெருங்கிய ஓப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கோவை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன. அறப்போர் இயக்கம் பல ஊழல்களை வெளிக்கொண்டு வந்துள்ளோம். ஊழல் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு நெருங்கிய ஓப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து அறப்போர் இயக்கம் சார்பில் டெண்டர் வழிமுறை மாற்றங்கள், துறை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக மனு அளித்துள்ளோம். கோவை மாநகராட்சி நேர்மையான மாநகராட்சியாக வேண்டியது அவசியம். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட செந்தில் & கோ, கேசிபி நிறுவனம் உள்ளிட்ட வேலுமணியின் நெருங்கிய ஒப்பந்ததாரர்களின் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு உள்ளான மாநகராட்சி பொறியாளர்கள் லட்சுமணன், சரவணக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளை கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

அடுத்த கட்டமாக டெண்டர்கள் இ டெண்டர்களாக மாற்ற வேண்டும். இ டெண்டர் நடைமுறை முழுவதும் ஆன்லைன் மூலமாக நடைபெற வேண்டும். ஒப்பந்தராரர்கள் பொறியாளர்களை சந்திக்கும் வகையில் இருக்க கூடாது. இ டெண்டர் சென்னை மாநகராட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியிலும் விரைவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கிறோம். அனைத்து டெண்டர் விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும். டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை அவசியம்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அம்மா ஐஏஎஸ் அகாடமி விதிமுறைகளை மீறி, எஸ்.பி.வேலுமணியின் சகோதரார் அன்பரசன் நடத்தும் நல்லறம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், எஸ்.பி.வேலுமணி அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக குறைந்த வாடகைக்கு வழங்கியுள்ளார். அம்மா ஐஏஎஸ் அகாடமிக்கு அனுமதியை ரத்து செய்து சுகாதார ஆய்வாளர் அலுவலகமாக மாற்ற வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story