கிராமங்களில் பாஜகவை கொண்டு சேர்ப்பதே முதன்மைப்பணி: அண்ணாமலை பேட்டி

கிராமங்களில் பாஜகவை கொண்டு சேர்ப்பதே முதன்மைப்பணி: அண்ணாமலை பேட்டி
X

கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

அனைத்து கிராமங்களிலும் பாஜகவை கொண்டு சேர்ப்பதே முதன்மையான பணி என்று, மாநிலத்தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலை கூறினார்.

பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, வரும் 16 ம் தேதி சென்னையில், அக்கட்சி அலுவலகமான கமலாயத்தில் பதவி ஏற்க இருக்கிறார். முன்னதாக, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சாலை மார்க்கமாக பேரணியாக செல்கிறார்.

இப்பேரணியானது, கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று துவங்கியது. முன்பாக கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் அண்ணாமலை வழிபாடு நடத்தினார். பின்னர், சென்னை புறப்பட்ட அண்ணாமலைக்கு வ.உ.சி. மைதானம் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க, மலர் தூவியும் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை செல்லும் வழியில் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்கிறேன். கோவிட் காலமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணமாகின்றோம்.

பா.ஜ.க வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்படுவேன். பாஜக, தனி மனிதருக்கான கட்சி அல்ல. அனுபவமும் இளமையும் சேர்ந்து கூட்டு முயற்சியாக பாஜக மிகப்பெரிய கட்சியாக தமிழகத்தில் வளரும். வயது என்பது முக்கியம் கிடையாது. பாஜகவில் அனுபவம் இருப்பவர்களுக்கு பதவி கொடுப்பார்கள். பாஜகவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலர் தேசிய அளவில் பொறுப்பில் இருக்கின்றனர். ஒருபுறம் இளமையானவர்கள் கட்சியில் இருக்கின்றனர்.

மற்ற கட்சிகளில ஒரு தலைவர், ஒரு குடும்பம் என இருப்பார்கள். மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் ஒன்றாக இணைத்து செல்ல பயன்படுத்துவோம். அனைத்து தலைவர்களையும் ஒன்றாக அரவணைத்து, கூட்டு முயற்சியாக மிகப் பெரிய கட்சியாக பாஜகவை வளர்போம். தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் பாஜகவை கொண்டு சேர்ப்பதே எனது முதன்மையான பணியாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture