கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு.
கோவை இந்திய வர்த்தக சபை, தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கொங்கு கிலோபல் போரம் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற தொழில் துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழில் துறையினர் சந்திக்கும் சவால்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி காண நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல்வேறு தொழில் துறை அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். குறிப்பாக தொழில் துறை வளர்ச்சிக்காக சாலை விரிவாக்கம், நெடுஞ்சாலை கட்டமைப்பு மற்றும் கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஏ.வ.வேலு, கோவையின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சி உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார். கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு ஆயிரத்து 132 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும், நாளை மறுநாள் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும் எனவும் கூறிய அவர், 600 ஏக்கர் நிலம் விமானநிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட உள்ளதாக தெரிவித்தார்.
கோவை அவினாசி சாலையில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், கொங்கு மண்டல வளர்ச்சி என்பது தனிப்பட்ட வளர்ச்சி அல்ல, ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சி என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu