பி.எப். தொகையில் ரூ.25 கோடி மோசடி புகார் - கோவையில் பேராயர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

கோவையில், சி.எஸ்.ஐ கட்டுப்பாட்டில் உள்ள தேவாலய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை செலுத்தாமல், ரூ.25 கோடி மோசடி செய்த புகாரில், பேராயர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கோவை வெள்ளலூர் சி.எஸ்.ஐ. ஐக்கிய ஆலயத்தை சேர்ந்தவர் பாதிரியார் செர்சோம் ஜேக்கப். இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் பாதிரியார் ஜேக்கப் கூறியுள்ளதாவது: கடந்த 2005-ம் ஆண்டு முதல் சி.எஸ்.ஐ. ஆலய நிர்வாகத்தின் கீழ் பல்வேறு இடங்களில் தான் பணியாற்றி வந்த நிலையில், தனது வருங்கால வைப்பு தொகை கட்டணத்தை முறையாக சி.எஸ்.ஐ திருமண்டல தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வந்ததாகவும், தனது வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று சி.எஸ்.ஐ நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதன் பொருளாளர் உரிய பதில் அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது எனது கணக்கில் வைப்பு தொகை செலுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. கடந்த 2005-ம் ஆண்டு முதல், இதுவரை எனது கணக்கில் தொகை செலுத்தாமல் சி.எஸ்.ஐ. நிர்வாகம் மோசடி செய்துள்ளது.

நான் கேட்ட பிறகு, 2019-ம் ஆண்டில் புதிய கணக்கை தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தி உள்ளனர். இதேபோல சிஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ள 125 ஆலயங்களில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையை 25 கோடி ரூபாய் அளவில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர் .

இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட முன்னாள் பிஷப், மற்றும் தற்போதைய பிஷப் திமோத்தி ரவீந்தர் பொருளாளர் செல்வகுமார், முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிரியார் ஜேக்கப் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர், பிஷப் திமோத்தி ரவீந்தர், முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ். பொருளாளர் செல்வகுமார் ஆகிய 4 பேர் மீது கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி, மோசடி ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சி.எஸ்.ஐ கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற இந்த நிதி மோசடி, கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business